“மாவீரர் தினத்தன்று வடக்கு – கிழக்கில் சூறாவளி வீசியிருந்தால் சந்தோஷமடைந்திருப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“இதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம்.
மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. இருப்பினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதாகும். இங்கிலாந்தில் கூட பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது.
எமது நாட்டில் அது செய்திருந்தால் பாராளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள். எமது தரப்பிலுள்ள மனோ கணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.
சிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப் பிரிக்க செயற்படவில்லை.மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறியுள்ளார்.