இலங்கையை விட்டு மேலும் நகர்ந்தது புரவி – 9ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் யாழில் பாதிப்பு !

புரவி சூறாவளி நாட்டிலிருந்து மேலும் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புரவி சூறாவளியை அடுத்து ஆறு மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார் அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேல்மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 9346 குடும்பங்களை சேர்ந்த 31703 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 32 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 879 குடும்பங்களை சேர்ந்த 3189 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 48 வீடுகள் முழுமையாகவும்,

1826 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *