இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் அடுத்தவாரம் விநியோகத்துக்கு வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “தான் கண்டுபிடித்துள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் அடுத்த இரண்டு வாரத்துக்குள் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் உயிர்தொழில்நுட்பவியல் நிறுவனமான மாடர்னா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரகால அங்கீகாரத்திற்காக ஒப்புதல் கோரியுள்ளது” என்று செய்தி வெளியானது.
மேலும், ஒவ்வாமை மற்றும் நோய்த் தடுப்புப் பிரிவின் தேசிய நிறுவினத்தின் இயக்குனர் ஆண்டனி கூறுகையில், ”நீங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்காக உரிமை கோர முடியாது. ஆனால், இது கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கியத் தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.
லண்டனின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.