“மூன்றாவது கொரோனா அலை வருவதற்கு முன்னர் இந்த அலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த அலையே பாரிய அலையாக மாறலாம்” என வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் முன் எப்போதும் இல்லாத வயைில் கெரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர். அதனால் சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை முறையாக எடுத்துச் செயற்படாவிட்டால் இந்த இரண்டாவது அலையிலேயே இடம்பெறும் மரண எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்காகலாம்.
மேலும் மனிதர்கள் மூச்சை சுவாசித்து வெளியேற்றுவதன் மூலம் இந்த வைரஸ் தொடர்ந்து உயிர் பெறுகின்றது. அதனால் இலங்கை போன்ற தீவு நாடு உள்நாட்டுக்குள்ளே முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பேணிக்கொண்டு, சவர்க்காரமிட்டு கைகளை கழுவி முறையான சுகாதார வழிகாட்டலுடன் எமது நடவடிக்கைகளை மேற்கொண்டால் எமது பூமியில் இருந்து இந்த வைரஸை அழிக்கலாம்.
அத்துடன் ஒருசிலருக்கு இந்த கொரோனா வைரஸ் உடலுக்குள் தொற்றிக்கொண்டாலும் அவர்களுக்கு நோய் அறிகுறிகள் காட்டுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவர்கள் அறியாமலே, இந்த வைரஸ் பரவும் நிலை இருக்கின்றது. அதனால் மூன்றாவது கொரோனா அலை வருவதற்கு முன்னர் இந்த அலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த அலையே பாரிய அலையாக மாறலாம் என தெரிவித்துள்ளார்.