வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும் முதியவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளார்.
பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கை நகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தமாக பிறிதொரு இடத்தில் இருக்கும் வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது குறித்து சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினரிடம் குறித்த காணி உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து தொடர்ந்தும் மணல் அகழ்வில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்தியிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் நேற்றுமுன்தினம் மாலை குறித்த வீட்டிற்கு வாள்களுடன் சென்று மிரட்டிச் சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த வீட்டார் பருத்தித்துறை காவற்துறையில் மிரட்டல் சம்பவம் குறித்து முறையிட்டதாகவும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் காவற்துறையினர் உடனடியாக மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குறித்த வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை வாள்களால் கொத்தியும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மாலை வாள்களுடன் வந்து மிரட்டிய நிலையில் அச்சமடைந்த குறித்த வீட்டார் அயல் வீட்டில் சென்று இரவு தங்கியிருந்த நிலையில் அங்கும் அத்துமீறி உள்நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அவர்களை தாக்க முற்பட்ட போது தடுக்க முற்பட்ட அந்த வீட்டைச் சேர்ந்த முதியவரை தாக்கி படுகாயத்திற்குள்ளாக்கிச் சென்றுள்ளனர்.
இத்தாக்குதலில் சிங்கை நகர் வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது – 68) என்ற முதியவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர குறித்த பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவையும் வாள்வெட்டுக் குழுவினர் கொத்தி சேதமாக்கிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் காணிககு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை – பிரதீபன் (வயது-24) என்ற இளைஞனை நேற்றுமுன்தினம் மாலை முதல் காணவில்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை குடி நீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ள நிலையில், இன்று வடமராட்சி முராவில் பகுதியில் இருந்து அவர் சென்ற மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
டிப்பர் வாகனத்தினால் மோதி சேதமாக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் குறித்த இளைஞர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியவில்லை என குடும்பத்தார் தெரிவித்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்..
குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்புடையதாக கருதப்படும் டிப்பர் வாகனம் ஒன்றை பருத்தித்துறை காவற்துறையினர் மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.