சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்பில் போப் பிரான்சிஸ் பேசியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இவ் விவகாரத்தில் போப் தனது மவுனம் கலைத்திருப்பதாக உலக ஊடகங்கள் கூறுகின்றன.
சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர்.
சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது.
மேலும் அங்குள்ள மசூதிகளை சீன அரசு இடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சீனாவின் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச அரங்கில் கண்டனக் குரல் எழுந்தது. பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் போப் இவ்விவகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தன.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, இனவாத வன்முறைகளுக்காக சீனாவை போப்பிரான்சிஸ் கண்டிக்கவில்லை என்ற அதிருப்தி நிலவியது.
இந்நிலையில் போப்பிரான்சிஸ் முதன்முறையாக இவ்விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளார்.
லெட் அஸ் ட்ரீம்: தி பாத் டூ ஏ பெட்டர் ஃப்யூச்சர் (Let us Dream: The Path to A Better Future) என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள புத்தகத்தில் போப் பிரான்சிஸ், “நான் அடிக்கடி சிறுமைப்படுத்தப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களை நினைவுகூர்கிறேன். இனபேதத்தால் துன்புறுத்தப்படும் ரோஹிங்கியாக்கள், உய்குர் இன மக்களை நினைக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் யாசிதி இன மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. எகிப்திலும், பாகிஸ்தானிலும் வெடிகுண்டுகளுக்குப் பலியாகும் கிறிஸ்துவர்களை நினைவுகூர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போப் பிரான்சிஸின் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.