“கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும்வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது” என ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22.11.2020) நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சில தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாயகக் கோட்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றார்கள். உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் பற்றியும் பாராளுமன்றத்தில் கதைக்கின்றார்கள்.
நாட்டில் தற்போது முதுகெலும்புள்ள அரசியல் தலைவர்களே ஆட்சியில் இருக்கின்றார்கள். எனவே, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு இடமளிக்கப்படாது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.