கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கொரோனா வைரஸால் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெர்மனி, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கொரோனா வைரஸால் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.