“2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரே நாடு ஒரே மக்கள்  என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரே நாடு ஒரே மக்கள்  என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது” என  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று(17.11.2020) சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது ,

2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கொவிட் 19 ஏற்படுத்தியிருக்கின்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் பாரபட்சமற்ற – ஏற்றத்தாழ்வுகள் அற்ற முறையில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 1000 ரூபாயாக அதிகரித்தல் மற்றும் நுண்கடன் நிறுவனங்களைக் ஒழுங்குபடுத்தும் வகையிலான பரிந்துரை போன்ற விடயங்கள் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை, சிறுபான்மை மக்களுக்கு பொருளாதார தாக்கங்களையும் – அழுத்தங்களையும் ஏற்படுத்தகின்ற காரணிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்  தொடர்பாக தமிழ்தேசியகூட்டமைப்பு  குறிப்பிடும் போது “மிகவும் பலவீனமான வரவுசெலவுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் பாரிய கடன் நெருக்கடியில் உள்ள நிலையில், சர்வதேச கடன் எல்லை மீறிய ஒன்றாக காணப்படுகின்ற நிலையில், அதனை சமாளிக்கும் வரவு செலவு திட்டமாக அல்லாது மேலும் கடன்களை வாங்கும் வரவு செலவு திட்டமாகவே இது அமைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *