“இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. அது சட்ட விரோதமான அச்சுறுத்தல்” – எம்.ஏ.சுமந்திரன்

“போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றையதினம் ஊடகங்களுக்கு செய்தி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. அது சட்ட விரோதமான அச்சுறுத்தல் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த விடயம் தொடர்பில் நான் நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினேன். தமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தவதில் கூட தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு,பாரபட்சம் காட்டப்படுகின்றது. ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு அஞ்சலி செலுத்த சிங்கள மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழ் உறவுகள் அதனைச் செய்ய அனுமதிக்கின்றார்கள் இல்லை என்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினேன்.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளைக் காட்டி நினைவேந்தலைத் தடுக்க முனையும் கீழ்த்தரமான முயற்சியில் ஈடுபடாதீர்கள் என நாடாளுமன்ற உரையில் அரசுத் தரப்பை நான் கோரினேன்.

எனது உரைக்குப் பதில் கூற அரசுத் தரப்பில் எவரும் தயார் இல்லை. ஆனால், இப்போது இராணுவத் தளபதி தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றார். அதுவும் சட்ட விரோதமான முறையில் மிரட்டுகின்றார். தமிழ் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர முடியும். அதற்கு அவர்களுக்கு சட்ட ரீதியான உரிமை உண்டு. அதைத் தடுக்க முடியாது.

கொரோனா தொடர்பான விதிமுறைகளை மீறாமல், சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி, உரிய சுகாதாரப் பாதுகாப்போடு விடயங்களை முன்னெடுத்தால், தனிமைப்படுத்தல் சட்டம் மக்கள் மீது பாயமுடியாது.

தன்னிஷ்டப்படி யாரும் சுகாதார விதிமுறைகளை வியாக்கியானம் செய்ய முடியாது. அந்த விதிமுறைகளை மீறாத வரையில், யாரையும் தனிமைப்படுத்துவோம் என்று யாரும் எச்சரிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. அந்த அச்சுறுத்தலை இராணுவத் தளபதியும் விடுக்க முடியாது. அப்படி விடுத்தால் அது சட்டவிரோத அச்சுறுத்தல். சட்டத்தைத் தவறாகக் கையாளும் அத்துமீறல் நடவடிக்கை. ஆகவே, சுகாதார விதிமுறைப்படி ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு அமைய சமூக இடைவெளியைப் பின்பற்றி பிற சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கைக்கொண்டபடி, நமது உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்தலாம்.

சுகாதார விதிமுறைகளைத் தத்தமது அரசியல் தேவைகளுக்கேற்ப தவறாகப் பயன்படுத்த முயலும் சக்திகளை நாம் அடையாளம் கண்டு, ஆதாரத்துடன் நீதிமன்றங்களுக்கும் கொண்டு செல்ல முடியும்” என தெரிவித்துள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *