இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறந்ததாக இல்லை என குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி , சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
சமூகத்திலுள்ள பெரும்பாலானோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சு சமூகத் தொற்று இல்லை என கூறி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதெனவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தாமல், மக்களின் துன்பங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையிலேயே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.