“2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது” – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு !

2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்கரவே ஜீவரத்ன தேரரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

“கடந்த 2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது.

A/L பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுமே உயர்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர். எனினும் அரச பல்கலைக்கழகங்களின் வரையறுக்கப்பட்டுள்ள தன்மை காரணமாக நீண்டகாலமாகவே குறிப்பிட்டளவான மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகின்றனர்.

2019ம் ஆண்டில் 181,000 மாணவர்கள் A/L பரீட்சைக்குத் தோற்றியிருந்த போதிலும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டனர். எஞ்சிய 141,000 மாணவர்களுக்கு உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை 10 ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கூறியிருப்பினும், அது நம்பக்கூடியதாக இல்லை. ஏனெனில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தால், அதற்காக ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட வளங்களின் அளவிலும் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால் 2020ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டதை விடவும் 4000 கோடி ரூபா குறைவாகவே 2021ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே 2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் Z Scoreயின் அடிப்படையில் பாதிப்பை எதிர் கொண்டுள்ள மாணவர்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுபற்றி கலந்துரையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும்” என  அதில் கோரப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *