“தேர்தலில் ஊழல் நடந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை – அதற்கான ஆதராங்கள் எவையுமே இல்லை” – ட்ரம்புக்கு எதிராக திரும்பிய அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் !

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கடும் போட்டியளிக்கக் கூடிய மாகாணங்களில் குறிப்பிடத்தகுந்த வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை நெருங்கியுள்ளார். ஆனால், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி ட்ரம்ப், இந்தத் தேர்தல் வெற்றியை ஏற்காமல் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தத் தேர்தலில் ஜனநாயகத்தை ஜனநாயகக் கட்சியினர் திருடிவிட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயககட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப்பும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

அமெரிக்க வரலாற்றில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் 66.9 சதவீத வாக்குகள் பதிவாயின. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 11 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தினர்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 270 பிரதிநிதி வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதியாக முடியும்.

அந்த வகையில் ஜோ பைடன் இதுவரை வெற்றிக்கு அருகே 264 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் ஜோ பைடன் வெற்றிக்கு 7 பிரிதிநிதிகள் வாக்குகள் தேவைப்படுகின்றன. அதேசமயம், ஜனாதிபதி ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 50.5 சதவீத வாக்குகள் அதாவது 7 கோடியே 31 லட்சத்து 47ஆயிரத்து 934 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 47.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

மிகவும் இழுபறியாக இருந்து வரும் அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின், நியூ ஹெமிஸ்ஃபயர் ஆகியவற்றில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஃப்ளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையுடன் உள்ளார்.

ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத ஜனாதிபதி ட்ரம்ப்  பல்வேறு மாகாணங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். குறிப்பாக பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்சியா, நிவேடா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ள ட்ரம்ப் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். பல்வேறு மாகாணங்களில் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கோரியுள்ளார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், டெலாவேர் நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. நானும், கமலா ஹாரிஸ் இருவரும்தான் வெற்றியாளர்கள். மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது, இன்னும் முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்  வெள்ளை மாளிகையில் கூறுகையில், “ஜனநாயகக் கட்சியினர் ஜனநாயகத்தைத் திருடிவிட்டனர். தேர்தலின் நேர்மையைப் பாதுகாப்பதுதான் எங்கள் குறிக்கோள். இந்த முக்கியமான தேர்தலில் ஊழலையும், திருட்டுத்தனத்தையும் அனுமதிக்கமாட்டோம். வாக்காளர்களை மௌனமாக்கி தேர்தல் வெற்றியைத் திருடுவதையும் அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், தேர்தலில் ஊழல் நடந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு, புகழ்பெற்ற செய்தி சேனல்களான ஏபிசி, சிபிஎஸ், என்பிசி ஆகியவை தெரிவித்துள்ளன. ஊழல், திருட்டு நடந்திருப்தற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *