கொரோனா தடுப்பூசியை அமீரக துணை அதிபர் உடலில் செலுத்தி பரிசோதனை !

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளித்து சோதனை செய்யும் திட்டம் முதலில் தொடங்கியது. அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அமீரகத்தில் பரிசோதனை செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்கனவே சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள சைனா நேசனல் பயோடெக் குழுமத்தின் சார்பில் வெற்றிகரமாக 2 கட்டமாக  பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்தபடியாக 3-வது கட்ட பரிசோதனை அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், அமீரக மந்திரிகள் உள்பட பலருக்கு தடுப்பூசி உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் 42 நாட்களில் 17 முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

சோதனை முயற்சியில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரி முடிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாயில் உள்ள சுகாதார மையத்திற்கு வருகை புரிந்த அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிற்கு கொரோனா தடுப்பூசி மருந்து உடலில் செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் மருத்துவ நிபுணர்களிடம் அந்த மருந்தினை குறித்து கேட்டறிந்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் கூறும்போது, “அனைவரும் சுகாதார பாதுகாப்பு, சிறந்த உடல் நலத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன். அமீரகத்தில் தடுப்பூசியை கிடைப்பதற்கு இடைவிடாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய பணி நம்மை பெருமையடைய செய்கிறது. அமீரகத்தில் எப்போதும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இந்த கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றால் அமீரகத்தில் பெரிய வர்த்தக ரீதியிலான கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *