கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறைதான் மிக அதிக அளவில் அமெரிக்காவில் வாக்குகள் பதிவாகி உள்ளது. கிட்டத்தட்ட 160 மில்லியன் வாக்குகள் அமெரிக்காவில் இந்த முறை பதிவாகி உள்ளது. இதில் 101 மில்லியன் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.
அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள காங்கிரஸ் அவை தேர்தலில் செனட் சபையில் ஜனநாயக கட்சியும், பிரநிதிகள் சபையில் குடியரசு கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் 50 மாகாணங்களிலும் தற்போது வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் அங்கு காங்கிரஸ் சபைக்கான தேர்தலும் நடந்து வருகிறது. காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் பாராளுமன்ற சபை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளது. ஒன்று செனட் இன்னொன்று பிரநிதிகள் சபை. இங்கு மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தப் பாராளுமன்றில் உள்ள செனட் சபையில் 100 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல் பிரதிநிதிகள் சபையில் 435 பிரநிதிகள் உள்ளனர்.
இந்த அவையில் எந்த கட்சி எவ்வளவு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே இனி வரும் நாட்களில் சட்டங்களை இயற்ற முடியும். அதாவது புதிய சட்டங்களை ஜனாதிபதி இயற்ற வேண்டும் என்றால் இந்த செனட் மற்றும் பிரநிதிகள் சபையில் பெரும்பான்மை இருக்க வேண்டும். இதனால் இங்கு அதிக இடங்களில் வெற்றிபெறுவது அவசியம் ஆகும்.
அமெரிக்க காங்கிரஸ் அவையில் பிரதிநிதிகளை 2 வருடங்களுக்கு ஒருமுறையும், செனடர்களை 6 வருடங்களுக்கு ஒருமுறையும் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 செனட்டர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பிரநிதிகள் எண்ணிக்கை மாறுபடும்.
இந்த நிலையில் தற்போது நடந்துள்ள காங்கிரஸ் அவை தேர்தலில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் செனட் சபை – ஜோ பைடனின் ஜனநாயக கட்சி 40 இடங்களில் வென்றுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 37 இடங்களில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை.
காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை தேர்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி 68 இடங்களில் வென்றுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி 87 இடங்களில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை.