நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பினர் கோமாநிலையிலா? அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள் ? என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்திலெடுக்காமல் ஒளிந்து கொண்டிருந்தவர்கள்தான் என்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அவ்வாறானவர்களால் மக்களுக்கு அபிவிருத்தியையோ, அரசியல் தீர்வையோ பெற்றுக் கொடுக்க முடியாது.
அவர்கள்தான் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாத்தவர்கள். நாங்கள் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அதற்குரிய நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.
இது தெரியாதவர்கள்தான் நான் ஒன்றும் செய்யவில்லை என்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரே குடும்பமாக இருந்தபோதும்கூட இந்த காணிப்பிரச்சினை இருக்கத்தானே செய்தது. அப்போதே இந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கலாம். அப்போது அவர்கள் எங்கிருந்தார்கள்? அப்போது அவர்கள் கோமாநிலையிலா அல்லது செவ்வாய் கிரகத்திலா இருந்தார்கள். வெறுமனே வாயை மூடிக் கொண்டு இருந்துவிட்டு தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எங்கள்மீது விசமத்தனமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்.
கடந்த காலத்தில் மக்களின் பிரச்சினை களை கவனத்திலெடுக்காமல் ஐக்கிய தேசியகட்சியுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் தேசியகூட்டமைப்பு இன்று தன்மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்
எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கடந்த நல்லாட்சிக்கால அரசாங்கத்தில் தமிழ்தேசியகட்சி சார்பாக பாராளுமன்றம் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.