“மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும் ” – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி!

“மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும் ” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியாக  தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபால அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யூ.கமகேவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று நேற்றுமுன்தினம் (27)  வெளியிடப்பட்டது. அதற்கமைவாக தலவாக்கலை லிந்துலை நகர சபையில் உபதலைவராக பதவி வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் லெட்சுமன் பாரதிதாஸன் இன்றைய தினம் நகர சபைத் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையகத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. முதல் இரண்டு பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. ஒதுக்கப்பட்டுள்ள நிலம் தொடர்பாக சில வேலைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வரவு – செலவு திட்டத்தில் பல்கலைக்கழகத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நான் நம்புகிறேன்.  இந்திய அரசாங்கமும் உதவி செய்வதாகவும் கூறியிருக்கின்றது. மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாகவே இதன் பேச்சுவார்த்தைகளில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பாக எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன். நேற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். அவரும் சிறந்த முடிவை பெற்று தருவதாக என்னிடம் கூறினார். நாட்டில் இப்போதைய சூழ்நிலையில் எல்லோரையும் ஒரு இடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாகவே சம்பள பேச்சுவார்த்தையிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *