“தொற்று நோயியல் நிபுணர்கள் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை“ – அமைச்சர் ரமேஷ் பத்திரன

கொவிட்-19 வைரஸ் இலங்கையில் சமூகப் பரவலடைந்துள்ளதாக நிபுணர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்ததுள்ளார்.

முழு நாட்டையும் முடக்கி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை. அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கும் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் மக்களுக்கும் பொருளாதார சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமெனவும் அவர் கூறினார்.

அத்துடன், நாட்டில் நிரம்பல் ஏற்பட்டுள்ள மீன் வகைகளை கொள்வனவு செய்து டின் மீன் உற்பத்திகளை அதிகரிக்க உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கூறினார். ஊடகச்சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில்களையும் வழங்கியுள்ளார்.

கேள்வி : – வைத்தியசாலைகளில் கட்டில்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளரே?

பதில் :- இலங்கையில் தற்போதைய சூழலில் 4,468 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வேறாக பராமரிப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களாயின் அங்கு விசேட கண்காணிப்பின் கீழ் அவர்களை பேணவும் வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :- நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறிப்படுகின்றனர். இது ஒரு கொத்தணியா அல்லது வைரஸ் சமூகப் பரவலைடைந்துள்ளதா?

பதில் :- நோயை கட்டுப்படுத்துவது மற்றும் ஒழிக்கும் செயற்பாடுகள் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம்தான் அரசாங்கம் செயற்படுகிறது. தொற்று நோயியல் நிபுணர்களின் வழங்கியுள்ள தரவுகளின் பிரகாரம் இன்னமும் வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறவில்லை.

கேள்வி :- கொவிட் 19 க்கு உள்ளானவர்களுடன் முதல் தொடர்பை பேணியுள்ளவர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு அரசாங்க அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துவிட்டதா?

பதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடர்த்தி அதிகரித்துள்ளமை தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமையால்தான் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலின் வேகம் தீவிரமாக அதிகரித்துள்ளது. முதல் முறை பரவலிலிருந்த வைரஸையும் விட தற்போது பரவியுள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாகவுள்ளது. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். சுகாதார வழிக்காட்டல்களை முழுமையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.

ஆகவே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதார ஆலோசர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *