மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கும், அவர் வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் ,ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரை இடைநிறுத்துவதற்குத் தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்துள்ள முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாவது:-
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்குமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் உரிய முடிவை எடுக்கவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனரா? என்ற சந்தேகம் எழும். அதேபோல் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்” – என்றார்.