“தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் பயணிக்க தீர்மானித்துள்ளோம்’ – மாவை சேனாதிராஜா !

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டம்  யாழ்ப்பாணம் – நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (17.10.2020) நடைபெற்றிருந்தது.

இந்தக்கூட்டத்தொடரினை அடுத்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பாக  ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  “தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து பயணிப்பது எனத் தீர்மானித்துள்ளோம்’ எனக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் மீண்டும் ஒன்றுகூடி இன்று ஆராய்ந்தோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டும் எனக் கலந்துகொண்ட அனைத்துப் பிரதிநிதிகளும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அமைப்பு ரீதியாக எவ்வாறு நாம் செயற்பட வேண்டும்? எவ்வாறு நாம் ஸ்தாபன ரீதியாக அமைய வேண்டும்? என அந்தக் குழு ஆராயவுள்ளது. அவர்கள் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளனர். அதன்பின்னர் நாம் அந்த அறிக்கை தொடர்பில் ஆராயவுள்ளோம்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும், நாம் தமிழ்த் தேசியப் பரப்பில் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இயங்குவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசவுள்ளோம். குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக எந்த ஒரு பிரச்சினைகள் எழுந்தாலும் அனைத்துக் கட்சிகளும் உடனடியாக ஒன்றுகூடித் தீர்மானங்களை எடுத்து ஓரணியில் பயணிப்பது எனத் தீர்மானித்துள்ளோம்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தற்போது பேசுபொருளாக உள்ளது. அந்தத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அனைத்துக் கட்சியினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தில் அந்தந்தக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி அதனை எதிர்ப்பார்கள் என நான் நம்புகின்றேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கட்டமைப்பு  ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தின் வருகைதருவதாக கூறியவுடன் ஈழத்­த­மிழர் சுயாட்சி கழ­கத்தின் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபையின்  உறுப்­பி­னரு­மான அனந்தி சசி­தரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ததுடன் சுமந்திரன் வருகை காரணமாக முன்னணியினர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *