திருகோணமலை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். கந்தளாய் பிரதேச கொரோனா நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பு இன்று(9) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை வழங்கினார்.
வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பெண், கொழும்பில் இருந்து கந்தளாய்க்கு கடந்த மாதம் 26ஆம் திகதி சென்றதாகவும் பின்னர் 28ஆம் திகதி அவர் மீண்டும் கொழும்பிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கொழும்பில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண், கந்தளாய் பகுதியில் தங்கியிருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். மேலும், கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் ஊடகங்களின் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.