10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தொடர்பாக மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இவற்றுக்கு தலைமை தாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மட்டக்களப்பு நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஈழவாதியான திலீபனை நினைவுகூருவதற்காக இவ்வாறு கடைகள்,அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். எமது நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் வர்த்தக நிலையங்கள் மூட முடியாது.
இது ஈழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம். ஏன் இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.அவர்கள் இன்னும் எமக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள இது நல்ல செய்தி.
வடக்கு – கிழக்கில் வர்த்தக நிலையங்களை மூட அவர்கள் விடுதலைப் புலிகளின் ஈழத்தையும் திலீபனையும் நினைவுகூரும் மிகப் பெரிய நிகழ்வை அவர்கள் அதே விதமாக நடத்துகின்றனர்.இவற்றுக்கு தலைமை தாங்குவது யார்? இதனை செயற்படுத்துவது யார்? இதில் இருக்கும் அதிகாரிகள் யார்? இவற்றை தேடி அறியும் பொறுப்பு நாட்டின் பாதுகாப்பு தரப்பினருக்கு உள்ளது.
நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி, சரியான சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்துள்ள தருணத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்குமாயின் நாங்கள் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருக்க முடியாது என்பது நாட்டுக்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம். இவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி காட்டினால், அதுதான் நாங்கள் பெறும் மிகப் பெரிய வெற்றி என்பது நான் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன் என சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.