கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று ஜனநாயக ரீதியில் போராட முடிவுசெய்துள்ள தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் எனவும் அதற்காக தமிழ் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையை வலியுறுத்தி தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, பொதுவான சிந்தனைக்குள் ஒற்றுமை கண்டிருப்பது தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதுடன் உரிமைப் பிரச்சினைகள் மாத்திரமின்றி சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கும் தீர்வு தரவேண்டும்.
இவர்களைப் பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.
தேசிய ஐக்கிய முன்னணியானது, சிறுபான்மைக் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு பல தடவை முயற்சித்தது. ஆகக் குறைந்தது முஸ்லிம் கட்சிகளையாவது ஒன்றுபடச் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தவிடுபொடியாகின. தலைமைத்துவங்களின் தலைக்கனங்களும் கௌரவப் பிரச்சினைகளுமே இந்தச் சமூகத்தின் சாபக்கேடாகியுள்ளன.
பொதுத்தேர்தலில் எதிரணியில் நின்று வெற்றிபெற்றவர்கள், இப்போது சமூகம் தொடர்பாக எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாது ஆளுங்கட்சியில் தாவப் பார்க்கின்றனர்.
எனவே, முஸ்லிம் கட்சிகள் தமது நலன்களுக்கு அப்பால் சமூகத்துக்காக உழைக்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.