உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 62 மில்லியன் டாலருக்கு மேல் செலுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “2020 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய 120 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையில், 62 மில்லியன் டாலருக்கு மேல் வழங்க முடியாது. கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்துக்கான நிதியிலும் அமெரிக்கா பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், சீனாவுடன் கூட்டு சேர்ந்து, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு அளித்துவரும் நிதியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 63 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகள் விடயத்தில் தன்னை சமாதானவானாகவும் சீன தொடர்பான விடயத்தில் தன்னை சண்டைக்காரனாகவும் காட்டி வருகின்ற ஒரு போக்கு தொடர்வதை காணலாம்.