இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக, இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் கூட நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் எதையும் எதிர்கொள்ளும் திறனுடன் இந்தியா இருப்பதாகவும் முப்படை தளபதி ஜென்ரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த அமெரிக்க-இந்திய தொழில்நுட்ப கூட்டமைப்பு மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய முப்படை தலைமை தளபதி திரு. பிபின் ராவத், சீனாவின் அத்துமீறலை இந்தியா தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை சாதகமாக்கி கொண்டு பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒருவேளை இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் கூட நடத்தப்படக் கூடும் என்றும், ஆனால், அதனையும் எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாகவும் திரு. பிபின் ராவத் கூறினார்.