கிராமிய மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் நகர மக்களை உயர் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபாய

40% வீதமான கிராமிய விவசாயிகள் நிலையான மற்றும் போதியளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் முதலாவது கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்வைத்த காலை பின்வைக்காது, எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி விவசாயிகளை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பின்னோக்கி செல்ல மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதால் நகர மத்திய தரப்பினரின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

40% வீதமான கிராமிய விவசாயிகள் நிலையான மற்றும் போதியளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது கிராமிய மக்களை விவசாயத்திற்காக ஊக்கப்படுத்த முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இறக்குமதிக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதன் கஷ்டத்தையும் சுட்டிக்காட்டினார்.

அந்நியச் செலாவணி விகிதங்களை கட்டுப்படுத்துவதற்கும் உயர் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.  இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் கொவிட் நோய்த் தொற்றினால் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானமுடையவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக்கொண்டு செயற்படுத்திய ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். சமூர்த்தி பயனாளிகளின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். வீட்டுத் தோட்டம். முட்டைக்காக கோழிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் போசாக்கு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நகர, மத்திய தரப்பினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொவிட் நோய்த் தொற்று காலத்தில் விவசாய பொருட்களை மலிவு விலையில் நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வழிமுறையை பின்பற்றி இடைத்தரகர்களின் சுரண்டலை தடுத்து, விவசாயியையும் நுகர்வோரையும் பாதுகாக்க முடியுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் நகர மக்களை உயர் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதற்காக சதொச, கூட்டுறவுத்துறை, விவசாய சேவை மத்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் விவசாய விளைச்சலை நேரடியாக நுகர்வோருக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

நாடு பூராவும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வந்து விவசாய விளைச்சல்களை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் வாழ்க்கை செலவு உபகுழு கலந்துரையாடியது.

வாரத்திற்கு ஒரு தடவை சந்தை நிலைமைகள் தொடர்பாக தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக ஒரு நபருக்கு தேவையான உணவின் அளவை இனங்காணல், பிரதேச செயலக தொகுதிவாரியாக வீட்டுத் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கோழி வளர்ப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கௌப்பி, உழுந்து, நிலக்கடலை, எள்ளு, குரக்கன் மற்றும் வெங்காய பயிர்ச் செய்கை வெற்றி கண்டுள்ளதால், எதிர்காலத்தில் அவற்றை இறக்குமதி செய்ய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர்களான அருந்திக்க பெர்ணான்டோ, ஷசீந்திர ராஜபக்ஷ, லசந்த அலகியவன்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *