ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 13பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, மினி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த குண்டிவெடிப்பு சம்பவித்துள்ளது.
வீதியோரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர் ரக வெடிகுண்டு ஒன்றின் மீது பேருந்து ஏறியதால், இந்த வெடிகுண்டு வெடித்தாக உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்தனர்.
முழுமையாக சிதைவுற்ற இந்த பேருந்தில் பயணம் செய்த ஆறு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் ஆகிய 13 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனையின் இயக்குனர் அஹ்மத் ஜாவித் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகர் காபூலுக்கு தெற்கே 450 கி.மீ தொலைவில் உள்ள பிராந்தியத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை வீதியோரங்களில் வைக்கின்றனர். இதனால், அவ்வப்போது பொதுமக்களும் இதற்கு இலக்காகுகின்றனர்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, 2019ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களின் வெடிப்பில் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் மற்றும் 2,330க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.