நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு முன்பாக சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா படையினர் இனப்படுகொலை செய்ததாக தமிழ்ப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து கருத்து வெளியிட்ட அட்மிரல் சரத் வீரசேகர, தமிழ் மக்கள் குறித்து கருத்துகூற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு உரிமை கிடையாது என்றும் கட்டமாக தெரிவித்தார்.
பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்பித்துள்ளார். இந்த கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு உத்தியோகபூர்வமற்ற பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டதாகவும், அதுகுறித்து அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மீண்டும் இந்த நாட்டில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நாடாளுமன்றில் கருத்துக்கள் வெளியிட்டால் அல்லது தமிழ் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினால் சுயநிர்ணயத்திற்காக தமிழ் இளைஞர்களை மீண்டும் தூண்டும் வகையில் பேசினால் உண்மையிலேயே அதனை நிராகரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே தமிழ்ப் பிரதிநிதி ஒருவர், தமிழ் மொழிதான் சுதேசவாசிகளின் மொழி என்று கூறியிருந்தார்.
அதனை நிர்ணயிப்பது இதுபோன்ற சபையல்ல. எனினும் எமது நாட்டைப் பற்றிய 2500 ஆண்டுகள் ஆவண வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இங்குள்ள அனைத்து சம்பிரதாயங்களையும் சிங்களவர்களே இயற்றிவைத்தார்கள். இது நாடு முழுவதிலும் உள்ள தொல்பொருள் அடையாளங்களினால் உறுதிபடுகிறது. இந்த வரலாற்றை தெரிந்துகொண்டே வல்லிபுரம் சிதைவுகளைத் தெரிந்துகொண்டே பிழையானவற்றைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
சுயநிர்ணயத்தைக் கோரி அவர் கருத்து முன்வைத்திருப்பதானது தாயுடன் சிறிய குழந்தை சந்தைக்குச் சென்று இனிப்பைக் கோருவதற்கு சமமாகும். 50 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் ஏனைய இனத்தவர்களுடன் வாழ்கின்றனர். ஆனால் மிகவும் பொறுப்புவாய்ந்த மதிப்பிற்குரிய அந்த உறுப்பினர், சிங்களவர்கள் வடக்கில் வாழமுடியாது என்று கூறியிருக்கின்றார்.
அவர் ரோயல் கல்லூரியில் பயின்றவர். சிங்களவர்களுடன் சட்டக்கல்லூரியில் பயின்றவர். 65 வருடகாலமாக சிங்கள சமூகத்துடன் வாழ்ந்தவர். இவர் தொடர்ச்சியாக சிங்கள மொழி, சிங்கள மக்கள் மீது அவதூறு செய்து வருகின்றார். பௌத்த மதத்திற்கு எதிராகவும், வடக்கில் புத்தர் சிலைகளை அகற்றும்படியும் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியுள்ளார்.
அவர் வேறுயாருமல்ல, விக்னேஸ்வரன் தான். அவர் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்கின்றார். முள்ளிவாய்க்கால் என்பது ஈழத்திற்கான போர் நிறைவுற்ற இடம். அங்கு பல ஆயுதமேந்தியவர்கள் கொல்லப்பட்டனர். அங்கு சென்று உத்தியோகபூர்வமற்ற பதவிப்பிரமாணம் செய்பவராயின் பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதல்கள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய வேண்டும். அவர் பேசிய கருத்துக்களும் ஹான்சாட்டிலிருந்து நீக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அட்மிரல் சரத் வீரசேகர ஸ்ரீலங்கா படையினர் இனப்படுகொலை செய்தார்கள் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திலுள்ள உறுப்பினர்கள் குறித்தும் தனது கடும் எதிர்ப்பினை வெளியிட்டார். ஸ்ரீலங்கா படையினர் இனப்படுகொலை செய்தார்கள் என்றும், போர்குற்றம் செய்தார்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணத்தில் வாக்குகள் கிடைக்காமைக்கான காரணமும் இனப்படுகொலை செய்தமையே என்றும் கூறியுள்ளார்.
கடந்த கால ஜனாதிபதி தேர்தலில், இனப்படுகொலை செய்தார்கள் எனக்கூறும் படைக்குத் தலைமைதாங்கிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிக மக்கள் வடக்கில் வாக்களித்தார்கள். ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தர்க்கத்தை நிராகரிக்கிறோம். போர்க்குற்றம் பற்றிய விசேட நிபுணர்களாகிய சேர்.டெஸ்மன்டி சில்வா, ஜெப்ரி நைஸ், பேராசிரியர் மைக்கல் கிரேன், பேராசிரியர் மைக்கல் நியூட்டன், ரொட்னி டிக்ஸன், கியூஸி, மேஜர் ஜெனரல்.ஜோன் ஹோம்ஸ் உள்ளிட்டவர்களும் ஸ்ரீலங்காவில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உயர்குலத்தினர் தாழ் குலத்தினருக்கு இரத்ததானம்கூட செய்யமாட்டார்கள். இப்படியிருக்க, சிங்களப் படையினர் அங்கு பலருக்கும் இரத்ததானம் செய்திருக்கின்றனர். ஆகவே இவர்களுக்கு தமிழ் மக்கள் பற்றி கருத்து கூற உரிமை கிடையாது. சிங்களப் படையினருக்கும் எமக்குமே அதற்கான உரிமை இருக்கிறது. காணாமல்போனோர் அலுவலகத்திற்கும் இம்முறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயரால் பெர்ணான்டோ புள்ளேயை தற்கொலைதாரி ஒருவரே கொலைசெய்தார். அவரது ஆள் அடையாளம் இதுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் அவருக்கான நட்டஈட்டைக் கோரினால் எப்படி வழங்குவது? சாலிய பீரிஸ் என்பவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர போர்க் குற்றம் பற்றி கூறிய போது அதனை வரவேற்றவர்.