வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழி தோண்டிப் வைக்கப்படுவார்கள் என தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணாஅம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவாளர்களை நேற்று (26.08.2020) மாலை சந்தித்து கலந்துரையாடிய வேளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாக கூறிய அவர் தனது கருத்தில், அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எதிர்காலத்தில் எனக்கு இருக்கின்றது. நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லவில்லை என நினைக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக தொடர்ந்து உழைத்த புலம்பெயர் வாழ் சொந்தங்கள் இளைஞர்கள் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது நான் வெற்றி அடைந்தவுடன் அரசுடன் கதைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் அந்த வளங்களை பெற்றுக் கொண்டு மக்களுக்கு வழங்வேன் என இவ்இடத்தில் கூறுகின்றேன்.
மேலும், கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன். அத்துடன் எமது கட்சியின் கிளைகளை அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவ ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்காலத்தில் எமது மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார்.