13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. என்னுடைய நிலைப்பாடும் அதுவே., என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவிற்கு நேற்று(25.08.2020) விஜயம் செய்த அவர் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை சந்தித்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “அரச நியமனங்களில் பலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களிற்காக நிராகரிக்கபட்டுள்ளதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குவால் அவர்களது சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பின் அவர்கள் பட்டதாரிகளாக உள்வாங்கப்படவேண்டும் என்பது தான் அரசாங்கத்தினுடைய இறுதி நிலைப்பாடாக இருந்தது.
அந்த வகையில் மேலதிகமாக 10 ஆயிரம் பேருக்கு அரச நியமனத்தை வழங்குவதற்கு ஐனாதிபதி இணங்கியிருக்கின்றார். அந்தவகையில் ஈபிஎப், மற்றும் மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்டிருந்த வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் மேல்முறையீட்டிற்காக விண்ணப்பிக்கமுடியும்.
அத்துடன் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத்திட்டம் வடக்கு கிழக்கிலும் செயற்படுத்தப்படும். இந்தவிடயம் தொடர்பாக நாளையதினம் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளேன்.
13 வது திருத்தச்சட்டத்தை தென்னிலங்கை தலைவர்கள் மாத்திரம் எதிர்க்கவில்லை தமிழ் தலைவர்களும் அதனை எதிர்த்துள்ளனர். 13வது திருத்தச்சட்டத்தை விடுத்து வேறு ஒரு தீர்வு வேண்டும் என்று புலித்தலைமை மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அன்று இதனை எதிர்த்தார்கள்.
எனினும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. என்னுடைய நிலைப்பாடும் அதுவே. அதுதான் சாத்தியமானது. மக்கள் எனக்கு கூடிய ஆசனங்களை தந்திருந்தால் இவற்றை நான் இலகுவாக தீர்த்திருப்பேன்.
வடக்கில் இராணுவ அதிகாரியை ஆளுனராக நியமிக்கும் நிலைப்பாடு இதுவரை அரசிடம் இல்லை. எனினும் முன்னாள் ஜெனரல் சந்திரசிறியை ஆளுனராக நியமிக்குமாறு இந்த அரசாங்கம் வந்தவுடன் நான் கோரியிருந்தேன்.
ஏனெனில் அவருக்கு பின்னர் ஆளுனராக வருகைதந்த எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை. எனவே சந்திரசிறியை நியமிக்க கோரினேன். எனினும் ராணுவ அதிகாரியை நியமிக்காமல் சிவில் அதிகாரியையே நியமிக்கவேண்டும் என்று ஐனாதிபதியும் பிரதமரும் அன்று கூறினார்கள் என தெரிவித்தார்.