தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட ஒன்றே மாகாண சபை முறைமை , மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.! – சி.வி.கே.சிவஞானம்

மத்தியில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதனாலேயே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் மாகாண சபைகளுக்கு கூட முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் கருத்துக்களை அரசாங்கம் கூட கணக்கில் எடுக்காது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று  (25.08.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை முறைமை என்பது ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட ஒன்று. தனியே அது வடக்கு கிழக்குக்கு மட்டுமன்று உருவாக்கப்படவில்லை.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்றே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் அந்த மாகாண சபை முறைமை கூட போதாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நாம் கூறி வருகின்றோம். ஏனெனில் மத்தியில் மட்டும் அதிகாரங்கள் இருத்தல் நாட்டுக்கு நல்லதல்ல நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்திற்கும்  நல்லது அல்ல.

மத்தியில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதனாலேயே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் மாகாண சபைகளை கூட முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற சரத் வீரசேகர என்பவர் படு இனவாதி. ஐநாவிற்கு பல தடவைகள் சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்ற கருத்தைக் கூறி வருபவர்.

கோட்டபாய அரசில் தற்போது அங்கம் வகிக்கின்ற சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரது கருத்துக்களை அரசாங்கம் கூட கணக்கில் எடுக்காது என்றே நான் கருதுகின்றேன்.

எனவே இவர்களின் விஷமத் தனமான கருத்துக்களை நாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை. மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே இந்த நாட்டில் மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் முழு அதிகாரங்களும் மத்தியில் குவிந்தால் ஏனைய இனத்தவர்களின் உரிமைகள் கேள்விக்குறியாகவே இருக்கும். எனவே சரத் வீரசேகர போன்றவர்களின் கருத்துக்கள் நாட்டின் ஐனநாயகதரதிற்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *