இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகின்றது. இன்று காலை 9.30 மணி அளவில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக 223 உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தர உள்ளனர்.
இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அபே ஜனபல கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், முஸ்லிம் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்முறை பாராளுமன்றத்தில் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரையில் தெரிவு செய்யப்படவில்லை என்பதனால் அவர்களின் ஆசனங்கள் வெற்றிடமாகவே காணப்படுகின்றன.
இந்நாட்டின் பழமை வாய்ந்த மற்றும் பிரதானமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரத்திற்குப் பின்னர் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 81 பேர் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.