அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நாம் முன்வர வேண்டும்! – சமல் ராஜபக்

கடந்த காலங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட நில ஆக்ரமிப்பினை தடுத்து நிறுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கவனத்தில் கொள்ளப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொது மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பரந்த நோக்கத்திற்கமைய பொறுப்பு வாய்ந்த இந்த அமைச்சு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். நாரஹென்பிட்டியவில் உள்ள அமைச்சு கட்டிடத்தில் நேற்றையதினம் (17.08.2020) இடம்பெற்ற வைபவத்தில் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட அவர், மக்களுக்கான சேவைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான காலம் கனிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

´வசதியான குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளில் அமர்ந்திருப்பதற்கு பதிலாக, அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நாம் முன்வர வேண்டும்´ எனவும் இதற்காக அவர் இராஜாங்க அமைச்சின் அனைத்து அதிகாரிகளினதும் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகளை தீர்ப்பதாக உறுதியளித்த அமைச்சர் ராஜபக்ஷ, மக்களுக்கு சேவை செய்வதற்காக தமது கடமைகளை இதயசுத்தியுடன் நேர்மையான முறையில் முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தூரநோக்கிற்கமைய அவரால் முன்மொழியப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்காக அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகுல் மடுவ மண்டபத்தில் இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *