ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து கொரோனாவுக்கு உண்மையில் தீர்வாக இருக்குமென்றால் பேச்சுவார்த்தைக்கு நுழைய தயார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பற்றது என்ற குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புடினும்,அவரது சுகாதாரத் துரை அமைச்சகமும் இன்று மறுத்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “ கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக அனைத்து அறிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம். கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக ரஷ்யாவின் கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது கரோனாவுக்கு உண்மையில் தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்பினால், பேச்சுவார்த்தைகளிலும் நுழைய முயற்சிப்போம். ஆனால் நாங்கள்யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. எங்கள் பணியாளர்கள் இது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கொரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. உகிலேயே முதல்நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார்.
ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மையம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.