எமது நாட்டு அரசியலை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறும் தொழிலாக மாற்ற முடியும் என அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆயுதப்படைகளின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் இடம்பெறும் இவ்வாறான விரும்பத்தகாத அரசியல் நிகழ்வுகள் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. மகிந்த ராஜபக்ஷவை அப்பா என்று அழைத்தவர்கள் தற்போது ரணில் விக்ரமசிங்கவை அப்பா என அழைக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியை விட்டு வெளியேறிய போது, பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் கட்சிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை தூங்கமாட்டேன் என கூறிய மகிந்தானந்த அளுத்கமகே இன்று ரணில் விக்ரமசிங்கவின் மடியில் உறங்குவதாகவும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கியை கொள்ளை அடித்ததாக குற்றம் சுமத்திய பந்துல குணவர்தனவும் இன்று ரணில் விக்ரமசிங்கவிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திருடன் என கூறிவிட்டு அவரையே அணுகுவது நகைச்சுவையாக உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.