நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இன்று (26.7.2024) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.
குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி இன்று (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.