சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் – விசாரணை செய்ய 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழு !

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டிருந்த சர்ச்சையான நிலைமையினைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினை கண்காணிக்கும் நோக்கில் 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.

 

குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகள், எழுத்துமூலமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த விவகாரத்தில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர், ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் எனக் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன,

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *