யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1,265 மில்லியன் ரூபா திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி  [Clinical Training and Research Block  – CTRB] அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (24) திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதியானது சுமார் 942 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் 08 மாடிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள  இந்த கட்டட தொகுதி 6000 சதுர மீட்டர் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் மருத்துவக் கற்கை நெறிக்கான விரிவுரை, பரீட்சை மண்டபங்கள், கேட்போர்கூடம் மற்றும் மருத்துவத்திறன் விருத்தி ஆய்வுகூடங்கள் ஆகியன காணப்படுகின்றன.

சத்திர சிகிச்சை அறைகள், மீட்பு அறைகள், சத்திர சிகிச்சை கழிவுகளை அகற்றும் பகுதிகள்  கிருமித் தொற்றகற்றும் அறைகள் , சத்திர சிகிச்சை ஆயத்த அறைகள்  மற்றும் மருத்துவ களஞ்சிய சேமிப்பு வசதிகளும், பணியாளர் உடை மாற்றும் அறைகள், வரவேற்பு பகுதி நோயாளர் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பல வசதிகளும் இந்த புதிய கட்டட தொகுதியில்  காணப்படுகின்றன. அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பு மையமும் இங்கு ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ஆராச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், மருத்துவ கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த பிராந்திய ஒத்துழைப்பு மையம் ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீடத்திற்கான மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தொகுதிக் கட்டிடத் திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நானும் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த கட்டடத்தை அமைப்பதற்கான பொருத்தமான காணியை ஒதுக்கித் தருமாறு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் சங்கமானது 2013 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.

முன்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, அவற்றை இயன்றளவில் நிறைவேற்றியுள்ள நான், இந்தக் கோரிக்கையினையும் ஏற்று, இந்த இடத்திலே குறித்த காணியை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்திருந்தேன்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான இந்தக் காணியை தங்களுக்குத் தருமாறு ஏற்கனவே யாழ்ப்பாணம் வர்த்தகச் சங்கத்தினரும், இலங்கை மின்சார சபையும் யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தின் பாவனைக்கு இந்தக் காணி மிகவும் பொருந்தும் எனக் கருதியே இந்தக் காணியை அன்று நான் தெரிவு செய்திருந்தேன்.

இதேவேளை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதிக்கான கட்டிடத்தை அமைப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அண்மித்ததாக காணி கிடைத்தால் அது பொருத்தமாக இருக்குமென ஏற்கவே யாழ்ப்பாணம் மருத்துவ பீட மாணவர் சங்கமும் என்னிடம் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில் அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக இருந்த திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களுக்கு அறிவித்து 6000 சதுர மீற்றர் கொண்ட இந்தக் காணி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இதேவேளை இலங்கையிலே கொழும்பில் இத்தகைய தொகுதி ஒன்று செயற்பட்டு வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடம் அமைவதற்கு பெரு முயற்சிகளை மேற்கொண்டோர் என்ற வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் வசந்தி அரசரத்தினம் மற்றும் மருத்துவ பீடாதிபதியாக இருந்த அமரர் பேராசிரியர் பாலகுமார் ஆகியோரை இந்த சந்தர்ப்பத்திலே நினைவு கூருகிறேன்.

இதேவேளை இந்த மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் என்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களது பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு நான் ஏற்பாடு செய்திருந்தேன்.

அந்தச் சந்திப்பின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களது விடுதிகளில் உள்ள குறைபாடுகள், முகாமைத்துவ பீடத்துக்கான பேருந்து வசதிகள், சித்த மருத்துவத் துறையை பீடமாகத் தரம் உயர்த்துதல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கு உள்ளக பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அந்தக் கோரிக்கைகளையும் இந்த இடத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது அவதானத்துக்கு மீள கொண்டு வருவதுடன், ஜனாதிபதி அவர்களது முழுமையான ஒத்துழைப்புகளுடன் அந்தக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கான விவசாய, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பீடங்கள் அமைவதற்கு அதற்குரிய காணியினை நான் எவ்வாறு பெற்றுக் கொடுத்தேனோ, அதே போல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நான் முன்னிற்பேன்.

இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மண்டபம் எவ்வாறு இன்று கம்பீரமாக வீற்றிருக்கிறதோ, அதே போன்று இந்த கட்டிடமும் தனது வினைத்திறன்மிக்க செயற்பாடுகளால் மிளிரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

மேலும், யாழ்ப்பாணத்திலே தேசிய வைத்தியசாலை ஒன்று அமைய வேண்டும் என் எண்ணம் என்னிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதேபோல், குழந்தைகளுக்கான வைத்தியசாலை மற்றும் முதியோர்களுக்கான வைத்தியசாலை போன்றவையும் அமைக்கப்பட வேண்டும். இந்த விடயங்களையும் எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்க அவர்களது அவதானத்துக்கு முன்வைக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *