விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், 18.50 டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

எமது நாட்டுக்கு கிடைக்கும் அதிக அளவிலான டொலர்களில் இழப்பு ஏற்படுவதுடன் இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்துவதன் அடிப்படையும், நோக்கமும் என்னவென சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பொல்லேகல மகா வித்தியாலத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”தரவுகளை மையப்படுத்திய அறிவியல் ரீதியிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையிலயே இத்தகைய முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

நாட்டிற்கு நன்மை பயப்பதாக இது அமைய வேண்டும். இதன் சாதக, பாதகங்கள் குறித்தும், நன்மை தீமைகள் குறித்தும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். இது பிணைமுறி மோசடியை விட பாரதூரமான நிதி மோசடி என பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இது தொடர்பில் உண்மை நிலையை நாடு அறிய வேண்டும்.

நாட்டை ஆள்பவன் ஒரு தற்காலிக பொறுப்பாளனே. எனவே முட்டாள்தனமான கொள்கைகளில் இருந்து விலகி யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். யாரேனும் நல்லது செய்தால் நல்லது என்று கூற வேண்டும்.

எதிர்க்கட்சியோ அல்லது வேறு யாரேனும் நாட்டுக்கு நல்லது செய்தால் அதைப் பாராட்ட வேண்டும். தான் பேசும் விவாதங்களுக்கும் போலவே செயலிலான விவாதங்களுக்கும் தயார். நாட்டுக்கு தேவையான பணிகள், தீர்வுகள், பதில்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, தலைவர்கள் எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தயாராக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மூன்றாவது விவாதமாக பேசுவதோடு மாத்திரமல்லாது செயல் ரீதியிலான விவாதத்திற்கும் தாம் தயார்.

மதுவிலக்கு கொள்கையை கடைப்பிடிப்பவன் என்ற முறையில் மது, போதைப்பொருள், சிகரெட் என்பவற்றை நான் பகிர்ந்து வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உண்மையைப் பேசுவதால் தான் அதிகமாக சேறு பூசப்படுகின்றது. நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து விடுவித்து, மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்கான மூலோபாயங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை.

தோல்வி கண்ட கம்யூனிஸ, மார்க்சிஸ சித்தாந்தங்களால் எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தீவிர சோசலிஸவாதிகளின் பிள்ளைகள் கூட பணம் செலுத்தி படிக்கும் தனியார் பாடசாலைகளுக்கே செல்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் நாம் அரச பாடசாலைகளை தனியார் மயமாக்க மாட்டோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *