நீங்கள் மாறி வரும் அரசாங்கங்களுடன் கூட்டணி அமைத்தது இராஜதந்திரம் என்றால் கருணாஅம்மான் செய்ததும் இராஜதந்திரமே – ஜெயா சரவணா

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்வது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரமே என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்தார்.

பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அம்மான் படையணியின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றது. வன்னி பெருநிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான போராளிகள் எம்முடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் வருகின்ற வாரமளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

அம்மான் படையணியின் செயற்பாடுகள் என்ன என அதிகமானோர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆயுதத்தை தூக்கி இராணுவத்தினரை சுடுவதல்ல. சமூக சீர்திருத்தத்திற்காகவே உருவாக்கப்பட்டது. கடந்த காலங்களில் வவுனியாவில் போதைவஸ்து பாவனையை அடையாளம் காண உதவியிருந்தோம். அதேபோல் கடந்த வாரமளவில் மண் அகழ்வு, மரம் வெட்டுதல் போன்ற செயற்பாடுகளை பாதுகாப்பு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்திருந்தோம். அவ்வாறு எமது பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது எம்முடன் இணைந்த போராளிகள் குறித்த வேலைத்திட்டங்களினை முன்னெடுத்து வருகிறார்கள்.

கருணாம்மானிடம் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் நீங்கள் துரோகி என மக்கள் கூறுகிறார்கள் அதற்கு உங்கள் பதில் என்ன ? என வினவியதற்குரிய பதிலை அவர் வழங்கியிருந்தார். என்னுடைய மனதிலும் சில கருத்துக்கள் இருக்கின்றது. துரோகி என்பது என்ன என்று எனக்கு புரியவில்லை. யார் துரோகி? அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தமிழ்மக்கள், விடுதலைப்புலிகளை சார்ந்த வகையில் அவர் துரோகி. இந்திய இராணுவத்துடன் இருந்து எங்களை காட்டி கொடுத்ததால் துரோகி. எதற்காக காட்டிக்கொடுத்தார் எனில் அவரை கொலை செய்ய செல்லும் போது உதவியை நாடினார்.

அதே விடயத்தில் ரெலோ தலைவர் செல்வம் , ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் இவர்கள் ஆரம்ப காலத்தில் துரோகி அதன் பின்னர் விடுதலைப்புலிகளிடம் வன்னிக்கு சென்று விருந்துண்டதன் பின்னர் அவர்கள் தமிழின காவலர்கள். யாரெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறார்களோ அவர்கள் துரோகி இல்லை. யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் துரோகி. கருணாம்மானை கொலை செய்திருந்தால் இன்று அவரின் பெயர் அடிபட்டிருக்காது. அவரை கொலை செய்ய முடியவில்லை அதனால் துரோகியாக்கப்பட்டார்.

நாங்கள் தேசிய தலைவர் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கின்றோம். கருணாம்மானை துரோகி என்று கூறுமளவிற்கு யார் தற்போது இருக்கிறார்கள். விடுதலை புலிகளை பொறுத்தவரை ஒரு தீர்ப்பெனில் அது மரணதண்டனை தான். அத் தண்டனை கருணாம்மான் மீது ஏவப்பட்டது. அவர் அதிலிருந்து தப்பித்து கொண்டார்.

சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தது துரோகம் என கூறுகிறார்கள். அவரை கொலை செய்ய செல்லும் போது அரசியல் நீரோட்டத்தில் சேர்ந்தார். அவருக்கு இன்றுவரை பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தால்  அதென்ன இராஜதந்திரமா? அது இராஜதந்திரமாக இருந்தால் கருணாம்மான் செய்ததும் இராஜதந்திரம் தான். நீங்கள் எதிரியுடன் கூட்டு சேர்ந்தால் இராஜதந்திரம் நாங்கள் கூட்டு வைத்தால் துரோகம்.

பார்ப்பதற்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. முன்னாள் போராளிகளை பார்க்க வேண்டும். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாது வாழ்கின்ற மக்களுடைய வாழ்க்கையை பார்க்க வேண்டும். அரசியல் மாற்றங்கள் வரப்போகிறது நாடு முழுவதும் அலைமோதி கொண்டிருப்பது அரசியல் மாற்றம். சிங்கள, தமிழ் பகுதியாக இருக்கலாம் இரு பகுதியிலும் அவ்வாறான ஒரு நிலையே காணப்படுகிறது. களத்தில் வந்து நின்று பிரச்சினைகளை சந்தித்து பாருங்கள் வன்னி மற்றும் கிழக்கு பகுதிகளில் நடந்து பாருங்கள்.

அண்மையில் முன்னாள் போராளி அரவிந்தன் கைது செய்யப்பட்டிருந்தார். போராளிகளது நலன் திட்டத்திற்காக அவர் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரது விடுதலைக்காக யாராவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? பௌத்த விகாரை மூன்று வருடமாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் கட்டி முடிஞ்சு பெயின்ற் அடிக்கிற நேரத்தில் பாயை போட்டு படுக்கிறவங்களையும் காணல, வெடுக்குநாறிமலையில் தூக்கும் வரைக்கும் கிடக்கிறவங்களையும் காணல, முருகனாக்கள் வருகிறார்கள் என விமான நிலையத்திற்கு சென்று போஸ் கொடுத்தவர்களையும் காணல தமிழ் தேசியம் எங்களுடையது தான் என்று வந்து நிக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என மேலும் கருத்து தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *