தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் – இரா.சாணக்கியன்

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசு கட்சி போராடும் எனவும் மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு திருப்தி அளிக்காதவிடத்து வடக்கில் அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை நடந்த அதே நிலை கிழக்கிலும் உள்ள அமைச்சர்களுக்கும் நடக்கும். மக்களால் அவர்களும் வெகுவிரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள். ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் நேசக்கரங்கள் சமூக நல அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா நேற்று சனிக்கிழமை (06) அறிவொளி கல்வி நிலையத்தில் அமைப்பின் தலைவர் ந.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

 

இந்த நாட்டிலே வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்துள்ளன. செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் தற்காலத்தில் கிராமங்களிலுள்ள இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலே தொழிலுக்காகச் சென்றுள்ளனர். எதிர்காலத்தில் தேர்தல்கள் வரும்போது அதில் மக்கள் தீர்க்கமான முடிவெடுக்கும்போது, மாற்றங்களை நாம் கொண்டுவரலாம். ஜனாதிபதித் தேர்தலிலே சாணக்கியன் எம்.பியை போட்டியிட வைக்கலாமே என சிங்கள சகோதரர் வினவியதாக அதிபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

 

இந்த நாட்டிலே ஜனாதிபதித் தேர்தல் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலிலே பேரம் பேசுவதற்காக பலர் அணி அணியாக சேர்ந்துகொண்டு செல்கின்றார்கள். கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால தாம் பேரம் பேசும் சக்தியாக திகழலாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அது அவர்களின் நிலைப்பாடு.

 

ஆனால் தமிழ் சமூகமாகிய நாங்களும், எங்களை பலப்படுத்த வேண்டிய காலப்பகுதி இதுவாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை நோக்கி செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. அதற்காக நாங்கள் மக்களுக்குக் காட்டும் வழியிலே மக்கள் நின்று செயற்பட்டால் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும். எனவே, நாங்கள் அனைவரும் ஒரே அணியாக நின்று செயற்பட்டால் நாங்கள்தான் இந்த நட்டில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்றார்.

 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் சாதனையாளர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *