ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஏற்க முடியாது தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கையை விரும்புகிறார்கள்- இரா.சம்பந்தன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்ரூபவ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.

 

அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பிலான உரையாடல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை நிலையிலும் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது.

 

அத்துடன் குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.

அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.

 

அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.

 

எம்மைப்பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள்.

 

அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *