போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் !

வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியிலிருந்து ஆரம்பமாகும் என உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரிவுத் தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தது.

 

இருப்பினும், இச்சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

 

எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய தீர்வினை வழங்கும் நோக்கில் இயங்குவதாகக் கூறும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்காதது ஏன் எனவும், செயலகத்தின் சந்திப்புக்களில் பங்கேற்றவர்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்கள் எனவும் வினவியபோதே யுவி தங்கராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அண்மையில் தமது செயலக அதிகாரிகள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்ற வரையறுக்கப்பட்ட சில தரப்பினருடன் மாத்திரமே சந்திப்புக்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட சந்திப்புக்களில் இன்னமும் ஈடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அதேவேளை, ‘உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதில் முன்னிலையாகும் தரப்பினர் கையாளப்படவேண்டிய முறை உள்ளிட்ட ஒழுங்குவிதிகளை நாம் இப்போது தயாரித்து வருகின்றோம். அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக நாம் சந்திக்கவேண்டிய பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றோம். அத்தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாக சேகரிக்கின்றோம்’ என்றும் யுவி தங்கராஜா குறிப்பிட்டார்.

 

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணி வந்திருந்தாலும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியிலான சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *