கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர் அறுவரை கொலை செய்த 19 வயது இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் நால்வர் மற்றும் தாய் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் தாக்கப்பட்ட, உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வழக்கினை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான ஃபெப்ரியோ டி சொய்ஸாவின் உளநலம் தொடர்பில் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது, சட்டத்தரணிகள் சரியான பதிலை வழங்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சந்தேகநபரின் உளநலம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை வழங்குவதற்கு சில மாதங்கள் செல்லுமென சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கொலைக்கான காரணத்தை சந்தேகநபர் இன்னும் தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.