‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ – முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!

நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக ‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது.

வட மாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி, அந்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காணிகளின் உரிமையாளர்கள் தமது காணியின்றி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர், அந்த காணிகளை விடுவித்து, மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்துக்கு ஐயாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறு காணிகளை சேர்ந்த மக்களை இணைத்து ஜனாதிபதிக்கான தபால் அட்டையை அனுப்புவதற்கான பணிகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற முக்கியமாக கேப்பாப்புலவு வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமது காணிகள் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ள மக்களை இணைத்து இவர்களினூடாக தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னதாக காணி உரிமையாளர்கள் மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காணியை இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்தே, தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று, அங்கு தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *