கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என்கிறார் பேராசிரியர் ராஜ் சோமதேவ!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபனால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.

 

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

 

இருப்பினும் அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *