நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு விஜயங்கள், எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்பு ஆகியவற்றிற்காக 200 மில்லியன் ரூபாவை மேலதிக ஒதுக்கீடாக பாராளுமன்றத்தின் அனுமதியை கோரியிருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதி ஒழுக்கத்தை முதலில் கடைப்பிடிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்த அவர், வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு இவ்வளவு பாரிய தொகையை ஒதுக்குவதற்கு முன் பாராளுமன்றமும் ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் பாராளுமன்றத்தில் நிதி ஒழுக்கம் பற்றி பேசுகிறோம். ஜனாதிபதி நிதி ஒழுக்கத்தை முதலில் கடைபிடிக்க வேண்டும். அவர் நான்கு தடவைகள் ஐக்கிய இராச்சியத்திற்கும் இரண்டு முறை ஜப்பானுக்கும் விஜயம் செய்துள்ளார். அவர் 14 மாதங்களில் 14 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்,”
பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் மீதித்தொகை இன்னும் வழங்கப்படாத நிலையிலும், பாடசாலை சீருடைக்கான கொடுப்பனவுகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில் ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்களுக்கு மேலதிக ஒதுக்கீட்டை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சாமானியர்களின் பால், அரிசி, டீசல், பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு VAT வரியை விதித்து சேகரிக்கப்பட்ட நிதியில் ஜனாதிபதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என கூறிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இது 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்செயல் செலவாகும் என்றும், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6.1 இன் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார்.
“வழக்கமாக மார்ச் மாதத்திற்குப் பிறகு துணை மதிப்பீடுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஜனவரியில் நாங்கள் ஒருபோதும் துணை மதிப்பீடுகளை முன்வைத்ததில்லை. நாங்கள் நிதியாண்டை மட்டுமே தொடங்கினோம். இது 2023 இல் செய்யப்பட்ட தற்செயல் செலவினத்தை பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க மட்டுமே” என ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன் போது குறிப்பிட்டுள்ளார்.