புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத குடும்பங்கள் காரணமாக தற்கொலை சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் அவலத்தை மேலும் கூட்டி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய VAT வரியை அமுல்படுத்துவது அத்தகைய நடவடிக்கையாகும் என்றார்.
அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு VAT வரியை அதிகரிப்பது மாத்திரம் அல்ல என சுட்டிக்காட்டிய அவர், நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீள்குடியேற்றுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதே மற்றுமொரு வழியாகும் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் திருடர்களை நம்பி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டமையினால் இதனைச் செய்ய முடியாதுள்ளது.
திருடர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கம்பஹாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்