இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு !

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களினால் இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை இமயமலைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது.

 

இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பாக மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

 

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

 

இதன்போது நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தைப் பாராட்டிய உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழு பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

 

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் இமயமலைப் பிரகடனம் வெளியிடக் கிடைத்தமை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *