30

30

ராஜபக்ஷக்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்.. – வெளியானது புதிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாளைய தினம் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அந்தவகையில், வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்திக் கூர்மையான அரசியல் தலைவர் என்று பலரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைவிட பசில் ராஜபக்ஷ சிறந்ததொரு தலைவராவார்.

 

ரணிலைவிட பசிலுக்கு அரசியல் தொடர்பாக நன்றாகத் தெரியும். இதனால்தான் நேற்று மொட்டுக் கட்சி அப்படியானதொரு விசேட தீர்மானத்தை எடுத்தது. நாம் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை களமிறங்குவோம்.

 

அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர்தான் பசில் ராஜபக்ஷ ஓய்வார். ஏனெனில், மொட்டுக் கட்சிதான் நாடளாவிய ரீதியாக பலமானதொரு கட்சியாக இன்னமும் இருந்து வருகின்றது.

 

ஒகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து நாம் எமது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வோம்;.

நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ஷ தான் பிரதமராக பதவியேற்பார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 51 நாட்கள்தான் உள்ளன.அவரால் தொடர்ந்தும் ராஜபக்ஷவினரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

 

அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும், விரைவிலேயே தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எமது தரப்பில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

 

பாடசாலைகளுக்கு உதவிகள் வழங்கும் சஜித் பிரேமதாசவின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம் நிகழ்வுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

 

ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் திட்டங்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனம் சாதித்த போதிலும்,

சஜித் பிரேமதாசவின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை நியாயமற்றது என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரபஞ்சம் திட்டத்தில் 70 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 16 அதிகாரிகள்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டண முறையானது 2011 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

 

பின்னர் 2023 ஆம் ஆண்டு இறுதி வரையிலும் நவீன தொழில்நுட்பத்தின் படி பணம் செலுத்தக்கூடிய மென்பொருள் அமைப்பை ஏற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

 

இதேவேளை மோசடிகளை குறைப்பதற்காக தானியங்கி கதவுகளை திறக்கும் முறைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.